பதிவு:2024-12-04 11:57:03
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் வழங்கினார் :
திருவள்ளூர் டிச 04 : திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் சர்வதேச எய்ட்ஸ் தினம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் நீதிபதியுமான கே.நளினிதேவி ஆகியோர் தலைமை தாங்கினர். அப்பொழுது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் பேசியதாவது :
சர்வதேச எய்ட்ஸ் தினமானது கடந்த 1988 முதல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து சர்வதேச எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் உரிமைப்பாதையில் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. அதனால் எச்.ஐ.வி தொற்றால் பாதித்தவர்களிடம் ஒதுக்குதல், புறந்தள்ளுதல் தவிர்த்தும், பாகுபாடின்றி நடந்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசனைக்கு வரும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க தனி மையம் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கவும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக உரிமைப்பாதையில் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி அவர் முன்னிலையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஷெல்ட்ர் அறக்கட்டளையின் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 27 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 5 பேருக்கு டிபன் சென்டர் நடத்த தள்ளுவண்டிகள், ஒருவருக்கு உலர்ந்த மீன் கடை நடத்த தள்ளுவண்டி, ஒருவருக்கு ஃபேன்சி ஸ்டோர் நடத்த தள்ளுவண்டி, 2 பேருக்கு துணிக்கடைகள் நடத்த சேலை மற்றும் நைட்டி,3 பேருக்கு இஸ்திரி கடைகள் நடத்த இஸ்திரி பெட்டி, 3 பேருக்கு உணவு கடைக்கான பாத்திரங்கள், 10 பேருக்கு வீட்டை சுத்தம் செய்யும் பொருள்கள், ஒருவருக்கு பைக் சர்வீஸ் கடை நடத்த அதற்கான கருவிகள், மற்றும் ஒருவருக்கு மளிகை கடை நடத்த மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பணியாற்றும் தொண்டு நிறுவனம், சுகாதார துறையினர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.இறுதியில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை சமமாக நடத்தும் நோக்கத்தில் சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது.
இதில் திருவள்ளூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனம் ஜே. பிரபாகரன், திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் பி. பிரியராஜ், திருவள்ளூர் துணை இயக்குனர் (குடும்ப நலம்) பி.சேகர், திருவள்ளூர் மாவட்ட திட்ட மேலாளர் ஆர்.பவ்யதர்சினி, திருவள்ளூர் மாவட்ட ஐசிடிசி மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு பபிதா, ஷெல்ட்ர் இல்ல இயக்குனர் ஏ.டி.சாலமன் ராஜ் மற்றும் இல்ல பணியாளர்கள் மற்றும் மற்ற தொண்டு நிறுவனங்களின் இயக்குனர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.