கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் பேட்டி

பதிவு:2022-06-02 17:28:44



மதுரையில் கடந்த 29-ந் தேதி நடைபெற்ற செஞ்சட்டை பேரணியின் போது இந்துக்களுக்கு எதிராக ஆபாசமாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருவள்ளூரில் பேட்டி

கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் பேட்டி

திருவள்ளூர் ஜூன் 02 : பாஜகவின் 3-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன், கடந்த 29-ந் தேதி மதுரையில் செஞ்சட்டை பேரணியை கம்யூனிஸ்ட் கட்சி எம் பி வெங்கடேசன் ஏற்பாடு செய்ய அதில் விசிக தலைவர் தொல் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது இந்து கடவுள்கள் குறித்தும் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் கேவலமாகவும் ஆபாசமாக பேசியிருப்பதை பாஜக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீயசக்திகளை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் அப்படி இல்லையென்று சொன்னால் பொது மக்களுடன் சேர்ந்து பாஜக ஒடுக்கும் என்றும் தெரிவித்தார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இந்து கடவுள்களை அவமரியாதை செய்து வருவதாகவும், பாஜகவின் அழுத்தத்தால் திராவிடர் கழகம் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்த நாராயணன், இந்துக்களுக்கு எதிராக ஆபாசமாக பேசும் திராவிடர் கழகத்தை தடை செய்திட வேண்டும், இனிமேலும் இந்து கடவுள்களை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசினால் திராவிடர் கழக தலைவர் வீரமணியை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.

மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த முக ஸ்டாலின் 29-ந் தேதி நிகழ்ச்சியை கருத்தில் கொண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விசிக தலைவர் தொல் திருமாவளவன், கம்யூனிஸ்ட் எம்பி. வெங்கடேசனையும், மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டியின் போது காட்டமாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில நிர்வாகி ஆனந்தி மாவட்ட தலைவர் அஸ்வின் என்கிற ராஜசிம்மா மகேந்திரா, மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், மாவட்ட செயலாளர்கள் ஆர்யா சீனிவாசன், பன்னீர் செல்வம், மாவட்ட துணை தலைவர் சண்முகம், பூண்டி ஒன்றிய தலைவர் பாண்டுரங்கன், நகர தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.