பதிவு:2024-12-31 11:32:42
திருவள்ளூர் நகராட்சி 27 வது வார்டு கூவம் ஆற்றங்கரை ஓரம் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதனப் பொருட்கள் நாசம் : குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோரகள் வேதனை :
திருவள்ளூர் டிச 31 : திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரம் கங்கை அம்மன் கோயில் 2-வது தெருவில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களான மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், ஏ.சி., போன்ற மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதே நேரத்தில் மின்னழுத்தம் காரணமாக குடிநீர் மோட்டாரும் வேலை செய்யாததால் கேனில் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் சாதாரண மீன் பிடி மற்றும் கூலி தொழில் செய்து வரும் தங்களால் தொடர்ந்து பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க முடியாத நிலை இருப்பதாகவும், போதிய மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் படிக்க முடியாமல் இரவு நேரங்களில் மிக மிக சிரமத்திற்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் புதிய மின்மாற்றி அமைக்க அங்குள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக் கிளையை அகற்ற வீட்டின் உரிமையாளர் சம்மதிக்காத காரணத்தால் புதிய மின்மாற்றி அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் உடனடியாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.