பதிவு:2022-06-04 07:29:22
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் “ஊர் கூடி ஊரணி காப்போம்” என்ற இயக்கம் : விழிப்புணர்வு இலட்சினையை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டா
திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, அரசு, பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்புடன் தொடங்கப்பட்டுள்ள “ஊர் கூடி ஊரணி காப்போம்” என்ற இயக்கத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினமான வருகிற ஜூன் 5 அன்று 75 நீர்நிலைகளை சுத்தம் செய்வது குறித்தும், இத்தூய்மைப் பணிகளில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் மற்றும் இணையதள இணைப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இலட்சியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் பொருட்டு தொடங்கப்பட்டது “ஊர் கூடி ஊரணி காப்போம்” என்ற இயக்கம். இவ்வியக்கத்தின் மூலம் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட வேண்டும், மரக்கன்றுகள் நடப்பட்டு காடுகள் உருவாக்கப்பட வேண்டும்.இயற்கை வளம் பாதுகாக்கப்படுவதால் பல்லுயிர் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும் இப்பணியில் “சமுதாய பங்கேற்பினால்” நீர்நிலை பாதுகாப்பு உறுதியாகும். ஆகிய நன்மைகளை எய்தும் நோக்கத்தோடு இவ்வியக்கம் செயல்படும்.நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் திருவள்ளூர் மாவட்டம், தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினையொட்டியும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
உலகச் சுற்றுச்சூழல் நாளான ஜூன் 5-ம் நாள் பல தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் 75 நீர் நிலைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறும்.இச்சீரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் 044-29896043 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும் தங்கள் விவரங்களை https://docs.google.com/forms/d/e/1FAIpQLScaJYrAYJ5xi6XZ6m0_R- என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.