பதிவு:2025-01-02 11:40:57
ஊத்துக்கோட்டை அருகே வடகிழக்கு பருவ மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 01 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் இவர் சூளைமேனி பகுதியில் 8 ஏக்கரிலும், லட்சிவாக்கம் கிராமத்தில் 4 ஏக்கரில் நெற்பயிர்கள் நடவு செய்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது இதன் காரணமாக மேற்கண்ட விவசாயிக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி அழுகிப் போனது.
இந்த நிலையில் பாதிப்படைந்துள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க சூலைமேனி கிராம நிர்வாக அலுவலரான சிவக்குமார் என்பவரிடம் முறையிட்டுள்ளார். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கிடு செய்வதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன விவசாயி ரவீந்தர் தெரிவிக்கையில் வட்டிக்கு கடன் வாங்கி விவசாய தொழில் செய்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நடவு செய்துள்ள நெற்பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்தும் அவர் 8000 ரூபாய் லஞ்சம் வழங்கினால் நேரில் சென்று நெற்பயிர்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியதாக விவசாயி ரவீந்தர் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து லஞ்சம் கேட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கனமழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.