பதிவு:2025-01-02 11:43:31
திருவள்ளூர் அருகே காரில் யானை தந்தங்கள் கடத்திய ஒருவர் கைது : 2 பேர் தப்பியோட்டம் : ரூ.50 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்கள் வனத்துறை பறிமுதல் :
திருவள்ளூர் ஜன 01 : திருவள்ளூர் வழியாக திருநின்றவூருக்கு சிகப்பு நிற டொயோட்டா கிலான்சா சொகுசு காரில் சிலர் யானைத் தந்தங்களை கடத்திச் செல்வதாக மாவட்ட வனத்துறை அலுவலர் சுப்பையாவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து அவரது அறிவுறுத்தலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக அந்த வாகனத்தை வனத்துறை மறித்துள்ளனர் .ஆனால் கார் நிற்காமல் திருநின்றவூர் நோக்கி அதி வேகமாக சென்றுள்ளது.
இதனால் வனச்சரகர் அருள்நாதன் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது திருநின்றவூர் கோமதிபுரம் அரசு பள்ளி அருகே வந்த போது குறுகலான சாலையில் வாகனத்தை சுற்றி வளைத்தனர்.
அப்போது, வாகனத்தை நிறுத்திவிட்டு இருவர் தப்பியோடிய நிலையில், சிக்கிய ஒருவரை மட்டும் பிடித்தனர். அதைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் சோதனை மேற்கொண்ட போது உள்ளே 3 யானைத் தந்தங்கள் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து திருவள்ளூர் மாவட்ட வனச்சரகர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு பிடிபட்டவரிடம் விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் மாவட்டம், இஞ்சமங்களம் கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் உதயகுமார்(26) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய 2 பேர் குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், யானை தந்தங்களின் மதிப்பு ரூ.50 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உதயகுமார் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் திருநின்றவூர் அருகே சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.