பதிவு:2025-01-02 11:47:31
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜன 01 : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.