பதிவு:2025-01-04 13:31:37
ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர் நிதி மோசடி செய்ததாக கலெக்டரிடம் புகார் : விசாரணைக்கு வந்த தலைவர், துணைத் தலைவரிடம் பேசிவிட்டு சென்றதால் வார்டு உறுப்பினர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை :
திருவள்ளூர் ஜன 04 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் லாசனா சத்யா, துணைத் தலைவராக குணசேகரனும், ஊராட்சி செயலராக லோகநாதனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2023- 24 நிதியாண்டில் ஊராட்சி மன்றத் தலைவர் முறையாக வரவு செலவு காட்டவில்லை என்றும், செய்யாத பணிகளை செய்ததாக கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 5 வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதனைக் வட்டாட்சியர் வாசுதேவன் கண்டுக்காத நிலையில் வார்டு உறுப்பினர்கள் தமிழ்செல்வி, பலராமன், ராஜன், சரவணன், தேவி சந்திரசேகர் ஆகியோர் வட்டாட்சியரிடம் கேட்டுள்ளனர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலிருந்து விசாரணை செய்ய வேண்டியதற்கான கடிதத்தையும் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை விசாரணை நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காத்திருந்த நிலையில் அங்கு வந்த வட்டாட்சியர் வாசுதேவன் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியவர் வார்டு உறுப்பினர்களிடம் பேசாமல் வந்துள்ளார்.
அவசர வேலையாக செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் இரவு 7 மணியாகியும் வராததால் ஆத்திரமடைந்த 5 வார்டு உறுப்பினர்களும் திருவள்ளூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியர் வாசுதேவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களை அலை கழிப்பதற்கான காரணம் என்ன என கேட்டு,முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை காலை மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததையடுத்து வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.