பதிவு:2025-01-04 13:37:20
திருவள்ளூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய போலீசார் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் தள்ளுமுள்ளு :
திருவள்ளூர் ஜன 04 : திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து டோல்கேட் பகுதி வரை பூக்கடை, டீக்கடை, பேக்கரி, இனிப்பு கடை, ஹோட்டல், மளிகை கடை என சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து அதன் மீது ஆக்கிரமிப்பு செய்து மேல் பகுதியில் கடையின் பெயர் பலகை மற்றும் கீழ் பகுதியில் கடையின் விளம்பரப் பலகையை வைத்து பொது மக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு காரணமாக பொதுமக்கள் நெடுஞ்சாலை பகுதிகளில் நடந்து சென்றதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து டோல்கேட் பகுதி வரை உள்ள கடைக்காரர்களுக்கு நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை தாங்களே அகற்ற வேண்டும் என முறையாக நோட்டீஸ் கொடுத்தனர்.இருப்பினும் கடைக்காரர்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிற்றரசு உத்தரவின் பேரில் உதவி கோட்ட பொறியாளர் தஸ்நாவிஸ் பெர்னான்டோ, உதவி பொறியாளர் பிரசாந்த், திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப் பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை இடித்து எதிர்ப்பு தெரிவித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் கடைக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக இடித்து அகற்றினார்கள்.
இந்த நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யும் பணி திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து டோல்கேட் பகுதி வரை உள்ள சாலையின் இரண்டு புறமும் தொடர்ந்து நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது போலீசாருடன் கடைக்காரர்கள் தள்ளு, முள்ளு ஏற்பட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.