பதிவு:2025-01-08 11:52:24
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் : சாலை மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள் கைது :
திருவள்ளூர் ஜன 08 : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சி துறை அலுவலர்களின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மெல்கி ராஜா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி சேகர், மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தின் போது காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் என வெளியிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வினை மேலும் காலதாமதமின்றி வழங்க வேண்டும். கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல் மற்றும் இதற்கான ஆணையம் அமைத்திட வேண்டும் என்பது உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட முயன்றனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை தரதரவென இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.