பதிவு:2025-01-09 14:59:18
கோவில் பதாகை ஏரியினை ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்துவதற்கான பணி : சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார் :
திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்துவதற்கான பணிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார். மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி தலைமை தாங்கினார்.ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :
ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள கோயில் பதாகை ஏரியின் கொள்ளளவு 80 மில்லியன் கன அடியாக உள்ளது. மழை காலங்களில் கோயில் பதாகை ஏரிக்கு வரும் வெள்ள நீரினால் கணபதி நகர் சாலை பகுதிகளுக்கு வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது அதை தீர்வு காணும் வகையில் ஆகவே இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீரினை கடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், நீர்வளத்துறை ஆகியோருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இங்கிருந்து வெளியேறும் நீரினை கிருஷ்ணர் நீர் கால்வாய்க்கு கொண்டு செல்லும் வகையில் கோவில் பதாகை ஏரியினை ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் 2 அடிக்கு ஆழப்படுத்தி தடுப்பணை அமைப்பதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆகவே இனி வரும் மழை காலங்களில் வெள்ள நீர் கணபதி நகர் சாலை பகுதிக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் கிருஷ்ணர் நீர் கால்வாய்க்கு செல்லுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
முன்னதாக ஆவடி மாநகராட்சி 43 வார்டு பகுதியான பருத்திப்பட்டிலிருந்து கூவத்திற்க்கு செல்லும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் துணை மேயர் சூர்யா குமார், ஆவடி மாநகராட்சி பொறியாளர் ரவிசந்திரன், மண்டல தலைவர்கள் அம்மு, அமுதா, ராஜேந்திரன், ஆவடி வட்டாட்சியர் சசிகலா, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.