பதிவு:2025-01-09 15:09:18
2025 ஆம் ஆண்டிற்கான “சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான “சிறந்த திருநங்கைக்கான விருது”க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுவித்த செய்திக் குறிப்பில், திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன் மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.1,00,000 க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கு அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தப்பட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப்பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்த திருநங்கைகள்.தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் குழு உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேற்படி விருதுக்கு தகுதியான விண்ணப்பத்தாரர், இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று, தங்களது கருத்துரு (விரிவான தன் விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள்) அடங்கிய (Booklet 4) தமிழ் 2 மற்றும் ஆங்கிலத்தில் 2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருது குறித்து விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in வெளியிடப்படும். இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 வது தளம், திருவள்ளூர் மாவட்டம் – 602001 –ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலரை 10.02.2025-க்குள் நேரில் அணுகி கருத்துருக்கள் சமர்ப்பிக்கவும் மற்றும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.