பதிவு:2025-01-10 12:34:14
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு : திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :
திருவள்ளூர் ஜன 10 : மாதத்திற்கு 2 ஏகாதசி என்று ஆண்டு முழுவதும் 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாத வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. இந்த நாளில் தான் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
108 திவ்ய தேசங்களில் 59-வது திவ்யதேசமான திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தைலகாப்பு திரை நீக்கி, திருவடி தரிசனத்துடன் மார்கழி மாத பூஜை நடைபெற்றது. 3 மணி முதல் 3.45 மணி வரை தனுர்மாத தரிசனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல் திறப்பு காலை 5 மணியளவில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார்.
தொடர்ந்து வீரராகவர் கோயிலில் பன்னிரு 12 ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் , மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பானாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து 7 மணியளவில் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 1 மணியளவில் நவகலச ஸ்தூபன திருமஞ்சனத்தின் போது ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.