பதிவு:2025-01-11 10:46:39
பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை கொண்டாட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வேண்டுகோள் :
திருவள்ளூர் ஜன 11 : அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக" கொண்டாடி வருவது வழக்கம்.
இந்நாளில் தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதும் வழக்கம். போகி அன்று, பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில், ‘பழையன கழிதலும். புதியன புகுதலுமென’ நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப் போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
இத்தகைய பழக்கம் பெருநகரங்களில் மட்டுமின்றி,சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வேறுவிதமாக கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவைகளின் தீங்குகளை அறியாமல் எரித்து வருகின்றனர்.
இவ்வாறு எரிப்பதால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன் மூலம் கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நல குறைவுகள் ஏற்படுகின்றன. இவை தவிர, எரிப்பதால் ஏற்படும் புகையினால் பார்க்கும் திறன் குறைபடுகின்றது. மார்கழி மாதத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்து பனி மூட்டமாக காணப்படுவதால், பல்வேறு விளைவுகள் அதிகரிக்கின்றன.இந்த தட்பவெப்ப நிலையில் பழைய பொருட்களை எரிப்பதால் நச்சுப் புகையும், நுண்துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று வாயு மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கப்பட்டு ஆகாயம், சாலை மற்றும் இரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன.
இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும். ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 13- ஆம் தேதி (திங்கக்கிழமை) அன்று அனுசரிக்கப்படும் போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து, நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.