பதிவு:2025-01-12 11:05:24
அரண்வாயல் குப்பத்தில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் கற்றல் அடைவு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் வருகை தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் :
திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளூர் அருகே அரண்வாயல்குப்பம் பிரதியுஷா பொறியியல் கல்லூரி வளாக கூட்டரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் கற்றல் அடைவு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை தொடர்பாக அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு ஆய்வு அலுவலர் பி.ஏ.நரேஷ் தலைமை வகித்து பேசியதாவது. பள்ளிகளில் குறுகிய காலத்திட்டம் மற்றும் நீண்ட காலத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறுகிய காலத் திட்டத்தில் தற்போது 10, 11 மற்றும் 12 வகுப்பும், நீண்டகால திட்டத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக அவசியம். அனைத்து வகுப்பு ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனைக் கொண்டு மீள் ஆய்வு செய்வது முக்கியமாகும்.
ஒரு பாடம், 2,3 பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களை இலக்காக வைத்து அவர்களை தேர்ச்சி அடையச் செய்வதோடு, அரசு வழங்கும் நலத்திட்டங்கள் உடனே கொண்டு சேர்க்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு போன்ற சமுதாய குழுக்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் சமுதாயத்திற்கு நல்ல மாணவர்களை வழங்கினால் சமூக அவலங்களும், ஏற்றத்தாழ்வுகளும் முற்றிலும் ஒழிக்கப்படும்.
பள்ளிகளில் குடிநீர், சுகாதார வளாக வசதிகளை கட்டாயம் மேம்படுத்துவதோடு, நீண்ட நாள் வருகை தராத மாணவர்களை தொடர்பு கொண்டு கற்றலின் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை பள்ளிகளில் சிறப்பாக நடத்தவும், அப்போது மாணவர்களின் தேர்வு தாள்களையும் மதிப்பெண் பட்டியலையும் பெற்றோர்களுக்கு பள்ளியில் வரவழைத்து அளிக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் வாசிப்புத்திறனை அதிகரிக்க நூலகங்களை பயன்படுத்தச் செய்ய வேண்டும். அதேபோல், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி, கற்றல் திறனை அதிகரிக்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதம் மாநில தேர்ச்சி சதவீதத்தை விட குறைவாக இருக்கக் கூடாது. அதேபோல் மாநில தேர்ச்சி சதவீதத்தை விட அதிகரிக்க நன்கு திட்டமிட்டு செயல்படுவது அவசியம் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கமாக அவர் எடுத்துரைத்தார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் பெ.ரவிச்சந்திரன், நேர்முக உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.