பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் பானைகள் விற்பனை மந்தம் : மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை :

பதிவு:2025-01-12 11:07:32



பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் பானைகள் விற்பனை மந்தம் : மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை :

பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொங்கல் பானைகள் விற்பனை மந்தம் : மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை :

திருவள்ளூர் ஜன 12 : தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையன்று பாரம்பரிய முறைப்படி மண்பானை மற்றும் அடுப்பில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.அறிவியல் அசுர வளர்ச்சி அடைந்துள்ள காலகட்டத்திலும், இன்றும் கிராமப் பகுதிகளில் பழமை மாறாமல் பொங்கல் திருநாளை பாரம்பரிய கலாச்சாரத்தின் அடிப்படையாகக் கொண்டு கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் திருநாள் தொடங்க 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திருவள்ளூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புட்லூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, ஈக்காடு, திருப்பாச்சூர், கடம்பத்தூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் மண்பானை மற்றும் அடுப்பு தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். தைப்பொங்கல் திருநாள் நாளை 13-ஆம் தேதி போகியுடன் தொடங்குகிறது. 14-ஆம் தேதி பொங்கல், 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் என கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

மண் பானை, மண் அடுப்புக்கு கிராம மக்களிடையே இன்றும் வரவேற்பு உள்ளது. இந்தநிலையில் திருவள்ளூர் பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மண் பானைகள், அடுப்புகள் தயாரித்து விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.ஆனால் பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் திருவள்ளூர் காக்களூர் பகுதியில் மண் பானை, அடுப்பு விற்பனை மந்தமாக காணப்படுகிறது. ரூ.50 ல் இருந்து ரூ.500 வரை விற்கப்படும் மண் பானைகளை கிராம பெண்கள் ஆர்வமாக வாங்க வரவில்லை.

இதனால் பொங்கல் பானைகள் விற்பனை செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். பெரிய பொங்கல் பானை ரூ.500, மாட்டுப் பொங்கல் பானை ரூ.150, குட்டி பானை ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் பெரிய பொங்கல் அடுப்பு ரூ.500, மாட்டு பொங்கல் அடுப்பு ரூ.250க்கு விற்கப்படுகிறது. பச்சைப் பயிர் சட்டி ரூ.50-க்கும், புள்ளகுட்டி சட்டி ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த ஆண்டு பொங்கல் விழா மந்தமாக காணப்படுகிறது என்றும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்னும் பானைகள் விற்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் இந்த பொங்கல் எங்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்காது. எனவே பொதுமக்கள் அனைவரும் மண்பாண்டம் தொழில் செய்கின்ற எங்களிடம் பானைகளை வாங்கி பொங்கலை கொண்டாட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.