பதிவு:2025-01-20 11:29:06
திருவள்ளூரில் உள்ள எஸ்பிஐ குடியிருப்பில் மின்சாதன பொருட்களை திருடியவர் கைது :
திருவள்ளூர் ஜன 20 : திருவள்ளூர் ஜே. என்.சாலையில் உள்ளது பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி.இந்த வங்கியில் மேலாளராக திலீபன் (37) என்பவர் கடந்த ஒன்றரை வருடமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வங்கி ஊழியர்களுக்காக கட்டப்பட்ட வங்கியின் பின்புறம் உள்ள குடியிருப்பில் யாரும் வசிக்காத நிலையில், வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அவ்வப்போது காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி மாலை வங்கி செக்யூரிட்டி மேலாளர் திலீபனுக்கு போன் செய்துள்ளார். அப்போது குடியிருப்பில் இருந்த மின்சாதன பொருட்கள் ட்யூப் லைட் ஃபிரேம், ஃபேன், மற்றும் ஏசி வெளிப்புற சாதனம் ஆகியவற்றை ஒருவர் திருடும்போது பிடித்து வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வங்கி மேலாளர் திலீபன் திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா (28) என்பதும் இவர் காக்களூரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. கூலி வேலை செய்து வரும் ராஜா குடிப்பதற்கு அவ்வப்போது இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து முக்கிய சாலையில் உள்ள வங்கியின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியிலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.