இந்திய விடுதலை போராட்ட வீரருக்கு அரசால் வழங்கப்பட்ட தாமரைப் பட்டயத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வந்த அவரது வாரிசுகளால் பரபரப்பு :

பதிவு:2025-01-21 12:05:05



இந்திய விடுதலை போராட்ட வீரருக்கு அரசால் வழங்கப்பட்ட தாமரைப் பட்டயத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வந்த அவரது வாரிசுகளால் பரபரப்பு :

இந்திய விடுதலை போராட்ட வீரருக்கு அரசால்  வழங்கப்பட்ட தாமரைப் பட்டயத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வந்த அவரது வாரிசுகளால் பரபரப்பு :

திருவள்ளூர் ஜன 21 : விடுதலைப் போராட்ட வீரரின் தியாகத்தை போற்றும் விதமாக கடந்த 1972 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு கருணாநிதி, சுதந்திர போராட்ட தியாகி கருப்பையா என்பவருக்கு தாமரைப் பட்டயம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் திருப்பாலைவனம் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

அதேபோல் 1973-ஆம் ஆண்டு மத்திய அரசும் தாமரைப் பட்டயம் வழங்கி கௌரவித்து உள்ளது. இதனையடுத்து கருப்பையா திருப்பாலைவனத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால் வருவாய்த்துறைசார்பில் அதற்கு முறையான பட்டா வழங்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகள் விடுதலைப் போராட்ட தியாகி கருப்பையா விவசாயம் செய்த இடத்தில் அவரது வாரிசுதாரர்களை அனுமதிக்காமல் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி கருப்பையா மறைவிற்குப் பிறகு அவரது வாரிசுகளில் ஒருவரான சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா வழங்க வழக்கு தொடர்ந்தார். வழக்கை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பொன்னேரி ஆர்டிஓ-வுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆர்டிஓ மற்றும் தாசில்தார் ஆகியோர் பட்டா வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சுதந்திரப் போராட்ட தியாகியை கௌரவிக்கும் வகையில் அரசால் வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்காததை கண்டித்து முதல்வரால் வழங்கப்பட்ட தாமரைப் பட்டயத்தை கருப்பையாவின் வாரிசுதாரர்களான மாரிமுத்து, ஆனந்தன், சங்கர், இந்திராணி, கஸ்தூரி, மல்லிகா ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திரும்ப ஒப்படைக்க வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கவெக்டரிடம் மனுவும் அளித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் புறப்பட்டு சென்றனர். சுதந்திர போராட்ட தியாகிக்கு அரசால் வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.