பதிவு:2025-01-21 12:07:25
பொத்தூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு : 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு :
திருவள்ளூர் ஜன 21 : தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் ஊராட்சியை செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம், பேரூராட்சியுடன் இணைத்து புதிய நகராட்சியை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் பொத்தூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் த.பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.பொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான, மேட்டு காலனி, கன்னடபாளையம், உப்பரபாளையம், ஜெயலட்சுமி நகர், ஆகிய பகுதிகளில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் வாழும் மக்கள் 100 நாள் வேலையை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். எனவே பொத்தூர் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் வீட்டு வரி, குடிநீர் வரி, போன்றவற்றை தங்களால் செலுத்த முடியாது. 100 நாள் வேலைக்குச் சென்றால் மட்டுமே தங்களுடைய குடும்பங்களை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.ஆகவே பொத்தூர் ஊராட்சியை நகராட்சியில் இணைக்க வேண்டாம் என ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.