பதிவு:2025-01-22 11:45:04
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடி செய்து 4 சவரன் நகை திருடி சென்ற வாலிபர் : போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் மர்ம நபர் தப்பி ஓட்டம் :
திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் கம்மார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீகாந்தம் (69). இவரது கணவர் பி.சின்னப்ப நாயுடு. இவர்களுக்கு ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூதாட்டிக்கு இடது கையில் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக திருவள்ளூர் இந்திரா நகரில் உள்ள மகன் சந்திரசேகர் வீட்டில் தங்கி நாள்தோறும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எலக்ட்ரிக் ஷாக் மற்றும் பிசியோதெரபி ஆகிய சிகிச்சையை கடந்த சில நாட்களாக சென்று பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 11.30 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி சிகிச்சை பெற்று 1.30 மணி அளவில் மருத்துவமனை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது முதல் மாடியில் வந்து கொண்டிருந்தபோது பின்னல் வந்த 30 வயது இளைஞர் மருத்துவர் உன்னை அழைப்பதாக கூறியுள்ளார். ஆதார் கார்டு இணைக்க வேண்டும் எனக் கூறி மூதாட்டி கையில் வைத்திருந்த ரசீதை வாங்கி அதில் கைநாட்டு பெற்றுள்ளார்.
இதனையடுத்து டாக்டர் ஸ்கேன் எடுக்க சொன்னார். அதனால் நகையை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் செயினை கழற்றி பையில் போட்ட போது அதை வாங்கி கையில் வைத்துக் கொண்ட அந்த இளைஞர் மூதாட்டியை ஸ்கேன் செய்யும் அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து நைஸாக நழுவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டும் அந்த இளைஞர் மாயமானார்.
இது குறித்து மருத்துவமனையில் காவலர்கள் யாரும் இல்லாததால் கேட் அருகே உள்ள காவலரிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாதது, செவிலியர்கள் இல்லாதது மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாதது தொடர் கதையாக இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் என்பதும், பொருத்தப்பட்டுள்ள கேமராவும் முறையாக வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக ஆட்சியில் கொள்ளை சம்பவங்கள் பல்வேறு விதங்களில் அரங்கேற வரும் நிலையில் இந்த நூதன திருட்டு சம்பவமும் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.