பதிவு:2025-01-24 12:11:14
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் மாற்று மலைப்பாதை : அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் ஜன 22 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி வரும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையிலும், மாற்று மலைப்பாதை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் ரூ.99.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தவில் மற்றும் நாதஸ்வர இசை பயிற்சிப் பள்ளியினை திறந்து வைத்தனர். மேலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இரயில் நிலையத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ஏதுவாக இலவச பேருந்து வசதியினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பின்னர் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்ததாவது :
திருத்தணிக்கு சென்னையிலிருந்து 1.40 கிலோமீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே புறவழிச்சாலை இருக்கின்றது. இந்நிலையில் திருத்தணி திருக்கோயிலுக்கு மாற்று மலைப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு சித்தூர் சாலையிலிருந்து மலைத் திருக்கோயிலுக்கு தரைப்பகுதியில் 900 மீட்டர், மலைப்பகுதியில் 1,100 மீட்டர் என 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்திட வேண்டும் என முடிவெடுத்தது. இதற்கு அரசு புறம்போக்கு நிலம் 0.52 ஹெக்டரும், தனியார் நிலம் 2.74 ஹெக்டரும், வனத்துறை நிலம் 2.72 ஹெக்டரும் தேவைப்படுகிறது. அதன்படி வனப்பகுதியில் நிலம் எடுக்க பணிகளை மேற்கொண்டோம்.அப்பொழுது இந்த நில எடுப்பு பணிக்கு ரூ.1.92 கோடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் இந்த சாலையை அமைக்க சுமார் 55 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை உடனே தொடங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். வனத்துறை இடம் தொடர்பான ஒப்புதல் பெறப்பட்டவுடன் அந்த நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைக்கிற பணி மேற்கொள்ளப்படும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் மாற்று மலைப்பாதை கட்டாயம் அமைய பெறும்.
அதேபோல் சிறுவாபுரிக்கும் நேரில் சென்று புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.ஆய்வினை முடித்து அந்த புறவழிச்சாலையையும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அமைப்பதற்கு அரசு முயற்சி செய்யும்.திருத்தணியை சுற்றியுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தீர்கள். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உடனடியாக ஆய்வு செய்து ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு தொடங்கப்பட்ட பணிகளை உடனடியாக முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்,இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா. இந்து சமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், இணை ஆணையர்கள் சி.குமாரதுரை, ரமணி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் எம். செல்வகுமார், கோட்டப் பொறியாளர் சிற்றரசு மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.