பதிவு:2025-01-24 12:20:34
திருப்பந்தியூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு காரணமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதி : சேற்றிலும், கரடு முரடான வயல்வரப்பிலும் பிணங்களை கொண்டு செல்லும் அவலம் :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சியில் பழங்குடியினர், நாவிதர், விஸ்வகர்மா, நாயுடு என பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் புதைப்பதற்கு செல்லும் 12 அடி சுடுகாட்டு பாதை தனிநபர்களால் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சுடுகாட்டுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலைக் கொண்டு செல்ல பாதை இல்லாததால் சேற்றிலும் வயல் வரப்பிலும், கரடு முரடான பாதையில் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிர் இழந்த பிறகு உடலை நல்லடக்கம் செய்ய ஆக்கிரமிப்பினை அகற்றி பாதையை சீர்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.