பதிவு:2025-01-24 12:34:31
லாரியை மடக்கி பணம் வசூல் செய்த கவரப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்தவர் பணி நீக்கம் :
திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம், கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவரப்பேட்டை - சத்தியவேடு கூட்டுச்சாலையில் கடந்த 21.01.2025 ஆம் தேதி இரவு ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் கவரப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் கோபிநாத் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த சரவணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவர்கள் அவ்வழியாக சென்ற லாரிகளை வழிமறித்து பணம் வசூல் செய்த வீடியோ ஊடகம் மற்றும் செய்தி சேனலில் வெளியானது. இந்த நிலையில், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்படி நபர்கள் செயல்பட்டதால், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாச பெருமாள் தலைமை காவலர் கோபிநாத் என்பவரை பணியிடை நீக்கம் செய்தும், ஊர்க்காவல் படையை சேர்ந்த சரவணன் என்பவரை பணி நீக்கம் செய்துள்ளார்.