பதிவு:2025-01-28 12:51:21
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் நாட்களில் மீனவர்களுக்கு பஞ்சப்படி வழங்கக்கோரி 15 மீனவ கிராம பிரதிநிதிகள் கலெக்டரிடம் கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 28 : ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படைவதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை மீனவர் கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் 29-ஆம் தேதி காலை 6.23 மணிக்கு என்விஎஸ் - 02 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 15 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி 29-ஆம் தேதிபழவேற்காடு, லைட்ஹவுஸ் குப்பம்,கூனங்குப்பம், அரங்கன்குப்பம், திருமலை நகர், வைரவன் குப்பம், கோரைக்குப்பம் உள்பட 15 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதித்துள்ளது.
ராக்கெட் ஏவுதளம் செய்யும் போது மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என தடை விதித்ததால் வங்கியில் கடன் பெற்று படகுகள் வாங்கி வாழ்வாதாரம் நடத்தி வரும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைவோம்.ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் ராக்கெட் விண்ணில் ஏவும்போது மீனவர்கள் கடலுக்குச் செல்ல கூடாது என தடை விதித்ததால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
கடலுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கும் நாட்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கூறி பழவேற்காடு சுற்றியுள்ள 15 கிராம மீனவர்களின் கூட்டமைப்பினர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார். இதனால் மீனவ கிராம மக்கள் கலைந்து சென்றனர்.