பதிவு:2025-01-30 12:14:18
திருவள்ளூரில் வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாயை தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் அவலம் : அலட்சியமாக செயல்பட்ட நகராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை :
திருவள்ளூர் ஜன 30 : மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லக்கூடாது, கழிவு நீர் கால்வாய்களை துப்புரவு பணி மேற்கொள்ளும்போது பாதுகாப்பு உபகரணங்களோடு சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்ற அறிவுறுத்தி உள்ளது. அதையே அரசு பின்பற்றவேண்டிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டு வடக்குராஜ வீதியில் கழிவு நீர் கால்வாயில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
இதில் 4 பேர் ஈடுபட்டனர். இவர்களுக்கு கையுரை, காலில் அணியும் ஷூ ஏதுமின்றி வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அந்த தொழிலாளர்களிடம் கேட்டபோது தங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் வழஙகவில்லை. இதை சுத்தம் செய்தால் தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அலட்சியமாக செயல்பட்ட திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.