பதிவு:2025-02-01 13:16:31
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :
திருவள்ளூர் பிப் 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 ம் ஆண்டு முதல் 2024-25 ம் ஆண்டு காரிப் பருவம் (நெல் ஐ) வரை ரூ. 379.74 கோடி பயிர் இழப்பீடு தொகை 1,77,099 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 2024-25ம் ஆண்டு சொர்ணவாரி நெற்பயிருக்கு 826 விவசாயிகளுக்கு ரூ.16.63 கோடி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
2016-17 முதல் 2021-22 வரை விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்கள் காப்பீடு செய்யும் போது தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் விடுபட்டு இருந்த விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் மூலம் எஸ்க்ரோ வங்கி கணக்கில் இருந்து வேளாண்மை துறையின் மூலம் விடுபட்ட விவசாயிகளின் ஆவணங்களை சரிபார்த்து 7789 விவசாயிகளுக்கு ரூ.14.68 கோடி பயிர் இழப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு நவரை பருவத்தில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 518, பச்சை பயிறு ஏக்கருக்கு ரூபாய் 298, எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 165, காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 17.02.2025 க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.நிலக்கடலை ஏக்கருக்கு ரூபாய் 462 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 31.01.2025 க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.கரும்பு பயறுக்கு ஏக்கருக்கு ரூபாய் 1200 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 31.03..2025 க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
உழவன் செயலி மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள்,வானிலை முன்னறிவிப்பு,மானிய திட்டங்கள்,விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகளின் கைபேசி மூலமாக வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் வேளாண் அறிவியல் மையம். திருவள்ளூர் மூலம் நெல் மற்றும் எள் பயிர்களில் - பயிர் உற்பத்தி மற்றும் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், வேளாண்மை இணை இயக்குநர்(பொ) க.வேதவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன், மண்டல மேலாளர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.