பதிவு:2025-02-01 13:18:45
திருவள்ளூர் மாவட்டத்தின் 24 வது ஆட்சியராக எம்.பிரதாப் நியமனம் :
திருவள்ளூர் பிப் 01 : திருவள்ளூர் மாவட்டத்தின் 24 வது ஆட்சியராக எம்.பிரதாப் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக த.பிரபுசங்கர் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென வெள்ளிக்கிழமை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்து அரசு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணிபுரிந்த வந்த எம்.பிரதாப் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முருகவனம், தாயார் முல்லைக்கொடி ஆவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் பட்டம் பெற்ற இவர், குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆவார். 2017 இல் இந்தியன் ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இதற்கு முன்பு மாநில மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநர், கோவை மாநகராட்சி ஆணையாளர், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியர், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி செயலாளர், தமிழக அரசின் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.