பதிவு:2022-06-11 12:18:17
ஆவடி மாநகராட்சியில் “உணவு திருவிழா – 2022” : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து, பல்வேறு உணவு வகைகளை சாப்பிட்டார்
திருவள்ளூர் ஜூன் 11 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட எச்.வி.எப் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக 10.06.2022 முதல் 12.06.2022 வரை நடைபெறும் “உணவு திருவிழா – 2022” ஐ பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அரங்குகளை பார்வையிட்டு, பல்வேறு உணவு வகைகளை சாப்பிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக ஓவியப்போட்டியையும் பார்வையிட்டு பேருரையாற்றினார்.
ஆவடி மாநகராட்சியில் 150 நாடுகள் இருக்கக்கூடிய உணவு கலாச்சாரங்கள், உணவு பழக்கவழக்கங்கள், அவர்களுடைய உணவு தயாரிக்கும் முறைகள், இவையெல்லாம் ஒன்றாய் இணைந்து பல்வேறு அரங்குகளை அமைக்கப்பட்டு உணவு திருவிழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏறக்குறைய ஒரு இலட்சம் நபர்களுக்கு இலவசமாக இங்கு பாதுகாக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படவுள்ளது. அதுபோல மறுசுழற்சி செய்யப்படக்கூடிய எண்ணெய்களை பல்வேறு உணவகங்கள் மற்றும் இனிப்பு பலகாரம் கடைகளிலிருந்து திரட்டி, அந்த எண்ணெய்கள் மூலம் பயோடீசல் செய்வதற்காக வழங்கப்படவுள்ளது.
இந்த மூன்று நாட்களில் வயிற்றுக்கு மட்டும் உணவளிக்காமல், செவிக்கும் உணவு அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துமிக்க பட்டிமன்ற நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள்; விளையாட்டுப் போட்டிகள், பல்சுவை நிகழ்ச்சிகள், பாட்டு பட்டிமன்றம், அடுப்பில்லாத சமையல், குழந்தைகளுக்கான சமையல், பாரம்பரிய சமையல், சமையல் அலங்காரம் உள்ளிட்ட சமையல் போட்டிகள், உணவு சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பின்னனி இசை பாடகர்கள் பங்கேற்கும் சமையலும் சங்கீதமும் நிகழ்ச்சி, திரை பிரபலங்கள் பங்கேற்கும் சமையல் குறிப்புகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், சிறந்த சமையல் கலைஞர்களுக்கு அறுசுவை அரசன், அறுசுவை அரசி உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.
மேலும் உலக ஐஸ்கீரிம் நாளை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பாக ஃபலுடா’ ஐஸ்கிரீம் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெறவுள்ளது. மேலும், ஒரு உலக சாதனை நிகழ்வாக, உபரி உணவை வீணாக்கமல் பகிர்வோம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு ஒருவேளை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இதனை அனைத்து மக்களும் முழுமையாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி, ஆவடி மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார், மண்டல குழுத் தலைவர் ஜி.ராஜேந்திரன், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ம.ஜெகதீஷ் சந்திர போஸ், ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர், உள்ளாட்சி பிரதிநிதிகள், உணவு பாதூப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.