பதிவு:2025-02-04 13:24:06
ஆன்லைன் விளையாட்டில் ரூ 10 லட்சம் இழந்த விரக்தியில் திருவள்ளூர் அருகே இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை :
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் அடுத்த வயலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இலக்கியத் தென்றல் என்ற மாத இதழை நடத்தி வருகிறார். இவரது மகன் தமிழ்செல்வன்(25). இவர் டிஎம்இ படித்து முடித்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார்.
தமிழ்செல்வனின் சித்தி வீடு சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்ததால் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தமிழ்செல்வன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் கடன் வாங்கி மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தகவல் அறிந்த தந்தை வாசுதேவன் அவனுக்கு அறிவுரை சொல்லி மீண்டும் வேலைக்கு போகச் சொல்லியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூருக்கும் ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தமிழ்செல்வனின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் "எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க.. நான் பண்ண தப்ப .. நானே சரி பண்றேன்.. ஒரே ஒரு வேண்டுகோள்... என்னை மாதிரி யாரும் ஆன்லைன் கேம் ஆடாதீங்க ப்ளீஸ்.... 6 வருடம் கஷ்டப்பட்ட என் கிட்ட ஒன்னும் இல்லாம போச்சு... என் அப்பா அம்மாவுக்கு கூட ஒன்னும் பண்ணலை... நா வேஸ்ட்... நல்லா வாழனும்னு நினைச்சேன்.. ஆனால் இப்போ பாதியிலேயே போறேன்... சாரி மைடியர் பிரண்ட்ஸ் சாரி சித்தி" என்று அந்த ஸ்டேட்டசில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.