பதிவு:2025-02-07 11:57:30
பட்டரைப் பெரும்புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது : மினி வேன் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் :
திருவள்ளூர் பிப் 07 : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடியா திமுக அரசின் காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் சர்வ சாதாரணமாக திருவள்ளூர் மாவட்ட முழுவதும் பரவலாக கடத்தி வரப்பட்டு விற்பனையாகி வருகிறது.அதன்படி திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டரைப் பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த ஈச்சர் மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 17, 250 பாக்கெட், கூல் லிப் 2200 பாக்கெட், ஸ்வாகத். 120 பாக்கெட், விமல் 62,400 பாக்கெட், வி1 62400 பாக்கெட், ரெமோ 9600 பாக்கெட், ஆர்எம்டி 5760 பாக்கெட், மிக்ஸ்டு 10 பாக்கெட் என 800 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.இதனையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த மினி வேனையும், ஒரு டன் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அக்பர் அகமது(37), சென்னை கொளத்தூரை சேர்ந்த சீனிவாசன் (35) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவித்தனர்.