பதிவு:2022-06-11 12:22:09
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் :
திருவள்ளூர் ஜூன் 12 : திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கும், அனைத்து ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணி மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி காமராஜர் சிலை வரை நடைபெற்றது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அனைத்து ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கான வழிமுறைகள், இடைநிற்றலை தவிர்த்தல் உள்ளிட்ட பதாகைகளை கையிலேந்தியும், கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், வாசகங்களை வழிநெடுகிலும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உரக்க சொல்லியும் சென்றனர்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ந.பூபால முருகன், எஸ்.தேன்மொழி (இடைநிலைக்கல்வி), பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.