பதிவு:2025-02-08 13:12:39
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார வளர்ச்சி கடன் வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் :
திருவள்ளூர் பிப் 08 : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார வளர்ச்சி கடன் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் பொருளாதார வளர்ச்சி கடன் வழங்குவதால் மகளிர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைய மிகவும் பயனுள்ளதாக இத்திட்டம் அமையும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த பெண்களாக இருத்தல் வேண்டும், சாதிச்சான்று, வருமானச்சான்று (ஆண்டு வருமானம் 3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஆதார் அடையாள அட்டை, வங்கி புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மேலும் 12 நபர்கள் குழுவில் செயல்பட்டு வருவதற்கான தீர்மானம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கான நகல் ஆகியவை கொண்டு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.