திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு கூறும் இலக்கியக் கருத்தரங்கம், பேச்சுப் போட்டி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு :

பதிவு:2025-02-08 13:14:09



திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு கூறும் இலக்கியக் கருத்தரங்கம், பேச்சுப் போட்டி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு :

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு கூறும் இலக்கியக் கருத்தரங்கம், பேச்சுப் போட்டி :  மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு :

திருவள்ளூர் பிப் 08 : தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ‘’தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்’’ என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவ் அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ / மாணவியர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசு தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்த்தென்றல் வி.கல்யாணசுந்தரம், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், கவிஞர் கா.வேழவேந்தன், முனைவர் மா.இராசமாணிக்கனார் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கிய கருத்தரங்கம் 21.02.2025 அன்று முற்பகல் 09.30 மணிக்கு திருவள்ளூர், திருப்பாச்சூர், திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வண்ணம் மேற்கூறிய தமிழ் அறிஞர்களை நினைவு கூறும் வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கம் 2 இல் 13.02.2025 அன்று முற்பகல் 09.30 மணிக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. அதே நாளில் அவ் அரங்கத்திலேயே பிற்பகல் 02.30 மணிக்கு கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவ,மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. அப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களுக்கு தனித்தனியே மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.

முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பேச்சு போட்டி குறித்த விவரங்கள், தலைப்புகள், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன. முதற்கட்டமாகப் பள்ளிகளில் பேச்சு போட்டி நடத்தி கல்வி மாவட்டத்திற்கு 20 பேர் என இரண்டு கல்வி மாவட்டங்களுக்கு (திருவள்ளூர் - 20, பொன்னேரி – 20) 40 மாணவர்களுக்கு மிகாமல் மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

கல்லூரி மாணாக்கர்கள் பேச்சு போட்டி குறித்த விவரங்கள், தலைப்புகள் இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) வாயிலாக கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாக கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே பேச்சு போட்டி நடத்தி கல்லூரிக்கு 2 மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். பள்ளி மாணவர்கள் 13.02.2025 அன்று முற்பகல் 9 மணிக்கு, கல்லூரிகள் மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கு வருகையை உறுதி செய்திட வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் 13.02.2025 அன்று நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதனைத்தொடர்ந்து 21.02.2025 அன்று நடைபெறவுள்ள தமிழ் இலக்கியக் கருத்தரங்கத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழ் இலக்கிய விழாவினை சிறப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவித்துள்ளார்.