பதிவு:2025-02-10 11:34:40
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றம் : மாவட்ட முதன்மை நீதிபதி ஜே. ஜூலியட் புஷ்பா திறந்து வைத்தார் : மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜே. ஜூலியட் புஷ்பா, மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்ரீநிவாச பெருமாள் முன்னிலையில் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து முதல் விசாரணையை துவக்கி வைத்து பேசினார்.
உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்கவும், இந்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், 18 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்களுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டமானது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை தடுப்பதற்கும் அதற்கான தண்டனை குறித்தும் விரிவாக இயற்றப்பட்ட சட்டம் ஆகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றம் துவக்கப்பட்டு, சமுதாய நலனை கருத்தில் கொண்டு, தூரித விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்கு பாதுகாப்பையும், நீதியையும் உறுதிப்படுத்திடவும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 2012 ஆம் வருடத்திய குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பிரத்தியேகமான விசாரிக்க தனி நீதிமன்றத்தினை நிறுவும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக அரசின் 02.02.2021 தேதியிட்ட அரசாணை எண்.47/2021ன்படி, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், உரிய கட்டமைப்பின்படி கட்டப்பட்டுள்ள, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தினை இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது,
இக்கட்டிடத்தில் குறிப்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் சென்று வர தனிப்பட்ட நுழைவாயில்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தில் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படாத வகையில் உரிய பாதுகாப்பு வசதிகள் உள்ளது.பாதிக்கப்பட்ட அவர்களுக்கு சிறுமிகள் இழைக்கப்பட்ட குற்றங்களை, குற்றம்சாட்டப்பட்டவர் குறித்தும் நீதிபதிகளிடம் எவ்வித தயக்கமும் இன்றி தெரிவிக்க ஏதுவாக காணொளி ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாயிலாக விசாரணை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது ஏற்படும் இடைவெளி நேரத்தில் பாதுகாப்பாக அமர்ந்து இருக்க தனியாக குளிரூட்டப்பட்ட அறை உரிய கழிவறை வசதியுடனும் கட்டப்பட்டுள்ளது இளஞ்சிறார்களுக்கு அவர்கள் நீதிமன்றத்தில் இருப்பதாக உள்ள மனநிலையை போக்கவும் சமூகமான மனநிலையை உருவாக்கவும், அவர்களுக்கு உரிய சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன
நீதிமன்ற கூடத்தில் சிறுமியர்களை விசாரணை செய்ய தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு, கண்ணாடி கதவுகளால் மூடப்பட்டு, குழந்தைகள் நல காவலர்கள் மூலம் காவல் பணி மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் உயரிய நோக்கமானது, பாதிக்கப்பட்ட சிறுமியர்களுக்கு காலதாமதம் ஏற்படாமல் உடனுக்குடன் சமூக நீதியும், பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டியதே ஆகும் என மாவட்ட முதன்மை நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி ஜி.சரஸ்வதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், அரசு வழக்கறிஞர் வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்ற அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.