பதிவு:2025-02-10 11:39:41
திருவள்ளூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் வார்டு உறுப்பினரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டியதால் மருத்துவமனையில் அனுமதி : ஆளும் கட்சி எம்எல்ஏ அழுத்தத்தால் டிஸ்சார்ஜ் செய்ததாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெகதீசன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சேகுவாரா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு நண்பர்களுடன் ஜெகதீசனை நோக்கி வந்த சேகுவாரா உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்டோர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகதீசன் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெகதீசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தலையில் 20 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் ஜெகதீசனை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அனுப்பும்படி அழுத்தம் கொடுத்ததால் காயம் ஆறுவதற்கு முன் டிஸ்சார்ஜ் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி வி ரமணா மருத்துவமனை முதல்வரிடம் பேசியதை தொடர்ந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யாமல் இருந்துவிட்டு இன்று காலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பியதால் ஆத்திரமடைந்த ஜெகதீசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை எதிரே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. கடுமையாக தாக்கியவர்களை கைது செய்யும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் சிகிச்சைக்காக ஜெகதீசனை அனுமதித்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் பி வி ரமணா இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு, தான் அவசரமாக வெளியே செல்வதாக அலட்சியமாக பதில் கூறியதால், நேரில் பேசியாக வேண்டும் என மீண்டும் சொன்னதற்கு மீண்டும் அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.
மேலும் இதுகுறித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சொன்னபோது, பண்ணிக்கோங்க என சொல்லிவிட்டு கிளம்பி சென்றுள்ளார். இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பாதிப்படைந்த ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்றத்தில் மிகுந்த சீர்கெட்ட நிலையில் இருப்பதாகவும், ஆளுங்கட்சி எம்எல்ஏ கொடுத்த அழுத்தம் காரணமாக முறையாக டிஸ்சார்ஜ் செய்யாமல் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு தன்னை பார்க்காமல் சென்று விட்டதாகவும் அதிமுக சார்பில் மருத்துவமனை முதல்வர் மற்றும் காவல்துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தெரிவித்தார்.