பதிவு:2022-06-11 12:31:13
திருவள்ளூரில் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி மக்கள் நலப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் மனு
திருவள்ளூர் ஜூன் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நலப்பணியாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பாபு தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அந்த மனுவில், மதிப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும், பணப்பலன், பணி தொடர்ச்சி ஆகியவை கோர வேண்டாம் என்கிற வாசகத்தை திரும்பப் பெற வேண்டும், 60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும், இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் திருவள்ளூர் மாவட்ட நலப்பணியாளர்கள் பெண்கள் அனைவரும் 50 வயதை கடந்துள்ளோம்.நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டு, கணவரால் கைவிடப்பட்டு,விதவைகளாக வாழ்ந்து வருகிறோம்.தமிழக முதல்வர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி தேவையில்லை எனவும்,மக்கள் நல பணியாளர் பணி வழங்க வேண்டும்,ரூ.7,500 ஊதியம் போதாது, எனவே காலமுறை ஊதியம் வழங்கினால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும்,தமிழக முதல்வர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி மாற்றம் செய்து மக்கள் நல பணியாளர் பணி வழங்க வேண்டும் என கூறினர்.இந்த மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.