பதிவு:2025-02-10 11:41:21
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு வழிப் பாதையில் சென்ற மாநகர சொகுசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு. போலீசில் புகார் :
திருவள்ளூர் பிப் 10 : திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு பூந்தமல்லி நோக்கி மாநகர சொகுசு சாய்தள பேருந்து புறப்பட்டது.அந்த செகுசு பேருந்தை சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன்(55) என்பவர் ஓட்டிச் சென்றார். காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜன்(45) நடத்துனராக சென்றார். அந்த மாநகர சொகுசு பேருந்து திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 9.40க்கு ஒரு வழி பாதையில் புறப்பட்டு வந்தது.
அப்போது எதிரே வந்த கார் ஓட்டுநர் போக்குவரத்துக்கு இடையூறாக வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் ஏன் இவ்வாறு ஒரு வழி பாதையில் வருகிறீர்கள் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கார் டிரைவர் மாநகர அரசு சொகுசு பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில் ஓட்டுனருக்கும் முகத்தில் லேசான காயமும் ஏற்பட்டது.
இது குறித்து பேருந்து ஓட்டுனர் திருவள்ளூர் டவுன் போலீஸ் மற்றும் பூந்தமல்லியில் உள்ள மாநகர பேருந்து பணிமனை கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து போலீசார் மாநகர அரசு சொகுசு பஸ்ஸின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய கார் டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.