பதிவு:2025-03-11 11:02:49
சதுரங்க பேட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் சேர்க்கை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 10 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரங்க பேட்டை ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கையினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்து பேசினார்.
கல்வித் திருவிழா என்பது ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடையே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை பள்ளிக்குச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8 பள்ளிகளில் 34 மாணவர்கள் சேர்க்கை முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது அதே மாதிரி கல்வி மாவட்டத்தை முழுவதையும் சேர்க்கும் பட்சத்தில் திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 809 நபர்களும், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 457 நபர்களும் ஆக மொத்தம் 1266 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன்.
முதல் ஆறு மாதத்திற்கு குழந்தைகளுக்கு பாடங்கள், வீட்டுப்பாடங்கள் எடுப்பதை தவிர்த்து அவர்களுக்கு செயல்திறன் குறித்த பயிற்சிகள் வழங்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு வருவதை சந்தோஷமாக வருவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தர வேண்டும். பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன் தங்கள் அண்டை வீட்டில் ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் இருக்குமே ஆனால் அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி பள்ளிக்கு சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். உலகிலேயே தொடக்க கல்வி சிறப்பாக செயல்படும் நாடு பின்லாந்து நாடு.பின்லாந்து நாட்டில்தான் எட்டாம் வகுப்பு வரை இயற்கை முறையிலேயே அவர்கள் கல்விக் கற்றுக் கொள்கிறார்கள். வகுப்பறையை தாண்டி இவ்வுலகம் இருக்கின்றது என்ற அடிப்படையில் அவர்களின் கல்வி முறை இருக்கின்றது.
அதேபோல் நமது ஆசிரியர்கள் மாணவர்களிடையே கல்வித்திறன் குறித்து பயிற்சிகளை அவர்களுக்கு வழங்கி அவர்களை இயற்கையான முறையில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல் முறை பயிற்சிகளை வழங்க வேண்டும். நமது மாவட்டத்தில் ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டது என்பதை உறுதி செய்திட வேண்டும் அதுவும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் தெரிவித்தார். பின்னர் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பள்ளி) பவானி, பள்ளி தலைமையாசிரியர் செங்குட்டுவன், மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.