பதிவு:2022-06-11 12:37:17
திருவள்ளூரில் மதுபோதையில் வந்தவர்களுக்கு டிக்கெட் தர மறுப்பு : 10 பேருடன் வந்தவர்கள் தியேட்டரை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்கள் மீதும் தாக்குதல் : போலீஸ் விசாரணை
திருவள்ளூர் ஜூன் 12 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராக்கி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கில் விக்ரம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த திரையரங்கில் மது அருந்திவிட்டு வரும் நபர்களுக்கு டிக்கெட் விநியோகிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு சிலர் மது அருந்திவிட்டு வந்து டிக்கெட் கேட்டுள்ளனர். அவர்கள் மது போதையில் தள்ளாடிக் கொண்டு வந்ததால் டிக்கெட் கொடுக்க முடியாது என சொல்லி தியேடடர் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபருடன் 10 பேர் கொண்ட வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் திரையரங்கில் புகுந்து அங்கு பணிபுரியும் நபர்களை தகாத வார்த்தைகளால் பேசி பலமாக தாக்கியுள்ளனர். அதனால் திரையரங்களில் கலவரம் போல் காணப்பட்டது. ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரிதுபடுத்த வேண்டாம் என திரையரங்கின் உரிமையாளர் சொன்னதால் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து இரவு 8 மணிக்கு மீண்டும் வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த மணியரசு என்பவரின் மகன் கோகுல் கொடியரசு மற்றும் சிலர் வந்து திரையரங்கில் பணி புரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தவாறு வந்ததால் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கோகுல் கொடியரசு மற்றும் மதன் ஆகிய இருவரும் திரையரங்கில் பணிபுரியும் விக்னேஷ் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் தங்களுக்கு டிக்கெட் தர மாட்டேன் என சொல்வீர்களா என கேட்டு திரையரங்கை அடித்து நொறுக்கிவிடுவோம், முழுசா யாரும் போக மாட்டீர்கள் என கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திரையரங்கு மேலாளர் டி.என். அரசு என்பவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படம் பார்க்க வருவதால் மது போதையில் வருபவர்களுக்கு டிக்கெட் வழங்க மாட்டோம் என தெரிவித்ததால் அத்துமீறி நுழைந்து தியேட்டரை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்களையும் தரக்குறைவாக பேசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.