பதிவு:2025-04-12 11:35:31
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு இரண்டு ஆண்கள், ஒரு மூதாட்டி என 3 பேர் பலி :
திருவள்ளூர் ஏப் 12 : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்தில் இரண்டு ஆண்கள் ஒரு மூதாட்டி என மூன்று அடையாளம் தெரியாத சடலங்களை மீட்டு ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லூருக்கும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் நிலைய மேலாளரிடம் ஓட்டுநர் கொடுத்த தகவலின் பெயரில் ரயில்வே இருப்பு பாதை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர் கருப்பு நிற பேண்ட் வெள்ளை கலர் சட்டையும் அணிந்திருந்தார்.
அதேபோல் திருவள்ளூர் அருகே அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் திருவள்ளூர் மேம்பாலம் கீழே ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஓட்டுநர் திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளரிடம் கொடுத்த தகவலின் பேரில் இருப்புப் பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது விரைவு ரயில் மோதி பலியானதாக கிடைத்த தகவலையடுத்து திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய ஆய்வாளர்கள் வெங்கடேசன், ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியானார்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் அருகே மூன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நேரங்களில் ரயிலில் அடிபட்டு இரண்டு ஆண்கள் ,ஒரு பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.