பதிவு:2025-04-30 11:03:28
மப்பேடு அருகே மனைவி, குழந்தையை கொலை செய்த வழக்கில் 15 ஆண்டு தலைமறைவு குற்றவாளியை கைது செய்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி.. எச்சரிக்கை :
திருவள்ளூர் ஏப் 30 : திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கல்லம்பேடு கிராமத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் தனது தனது குடும்பத்துடன் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2009 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி ஷகிமா மற்றும் 12 வயது குழந்தை சபீர் அலி ஆகிய இருவரை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஷ்ரப் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அஷ்ரப் அலி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அவர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அஷ்ரப் அலியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில் திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழரசி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த அஷ்ரப் அலியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் இது சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், திருவள்ளூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 17,ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இதில் தொடர்புடைய 90 நபர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கஞ்சா கடத்தலை கண்காணிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அதேபோல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலிலும் அடிக்கடி சோதனை செய்து வருவதாகவும், மாவட்டத்தில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள், கஞ்சா பயன்படுத்துபவர்கள் என 600 -க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும், இதில் 400க்கும் மேற்பட்டவர்களிடம் நன்னடத்தை பத்திரம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.