பதிவு:2025-04-30 11:10:05
மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை : திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு :
திருவள்ளூர் ஏப் 30 : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அன்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை சேம்பரில் கடந்த 2007 இல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத் திறனாளியான கன்னிகா மற்றும் அவரது அண்ணன், அக்கா, மாமா என குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த சக தொழிலாளியான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் மகன் திருமலை மற்றும் ஆனந்த் ஆகியோர் கடந்த 8.4.2007 அன்று கன்னிகா குடும்பத்தாரோடு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை வெளியில் தூக்கிக்கொண்டு செங்கல் சூளை பின்புறம் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து கன்னிகாவின் தந்தை வரதன் என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கடந்த 2008இல் வழக்கு பதிவு செய்து திருமலை என்பவனை கைது செய்து 2008-இல் திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2013 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திருமலையும் தலைமறைவானான். இதனையடுத்து பட்டாபிராம் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் தேடி வந்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022-ல் விருதுநகரில் தலைமறைவாக இருந்த திருமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு எட்டு சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதில் அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் அரசு வழக்கறிஞர் எஸ்.தமிழ் இனியன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கடத்தி சென்றதற்காக ஓராண்டு தண்டனையும், அடித்து துன்பத்திய குற்றத்திற்காக ஓராண்டு தண்டனையும் விதித்து இவற்றையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் பட்டாபிராம் உதவி ஆணையர் என்.கிரி மற்றும் முதல் நிலை காவலர் சந்திரா மற்றும் போலீசார் திருமலையை பாதுகாப்புடன் கொண்டு சென்று புழல் சிறையில் அடைத்தனர்.