பதிவு:2025-05-16 11:56:58
பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிவிப்பு :
திருவள்ளூர் மே 16 : தமிழ்நாட்டில் “பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி” திட்டமானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயனாளிகளுக்கு 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் சேர்ந்து பயன்பெற பின்வரும் தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும்.
பிப்ரவரி 2019 முன்பாக தங்கள் பெயரில் நில ஆவணங்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.2019 பிப்ரவரிக்கு பிறகு வாரிசு அடிப்படையில் இறப்பின் காரணமாக மட்டுமே நிலம் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.அரசு அலுவலராக இருக்கக்கூடாது.பத்தாயிரத்திற்கு மேல் ஓய்வூதியம் பெறுபவராக இருக்கக்கூடாது.அரசியல் அமைப்பு சார்ந்த பதவிகளில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.பதிவு செய்யப்பட்ட தொழில் முறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும்.
மேற்கண்ட தகுதியுடைய விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர் அல்லது தோட்டக்கலை அலுவலரை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெற வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC) மற்றும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே பி.எம்.கிசான் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வேளாண் அடுக்ககம் –பெரும் பதிவேட்டில் தங்கள் நில ஆவணங்களை பதிவு செய்தால் மட்டுமே பி.எம்கிசான் திட்டத்தின்கீழ் தொடர்ந்து தவணை தொகையினை பெற இயலும் என ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது.
பி.எம்கிசான் திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்பொழுது வரை 44,712 தகுதியான பயனாளிகளின் ஆதார் எண் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள தகுதியான பயனாளிகளில் 4,400 பயனாளிக்கு e-KYC செய்திடும் பணியும், 2,620 பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிகணக்குடன் ஆதார் எண் இணைத்திடும் பணியும் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார்எண் (e-KYC) உறுதி செய்யப்படாத பயனாளிகள் இரண்டு முறைகளில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். ஒன்று அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தங்கள் கைரேகையை பதிவு செய்தோ அல்லது இரண்டாவதாக தங்கள் இருப்பிடத்திலிருந்தபடியே, பி.எம்.கிசான் வலைதளத்திற்குள் சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க எண்ணை உள்ளீடு செய்தோ தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்திடலாம்.
பி.எம்கிசான் திட்டத்தின்கீழ் பயன் பெறும் தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கு பராமரிக்கப்பட்டு வரும் வங்கிக்கிளைக்கு சென்று தங்களது வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறும், தங்களது பட்டா நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் அருகில் உள்ள பொதுசேவை மையம் அல்லது தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அடுக்ககம்- பெரும் பதிவேட்டில் பதிவு செய்து தொடர்ந்து பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருப்பின், தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகிட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.