“எண்ணும் எழுத்தும்” திட்டம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பதிவு:2022-06-14 21:06:36



கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கற்றலின் இடைவெளியைக் குறைப்பதற்காக “எண்ணும் எழுத்தும்” திட்டம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

“எண்ணும் எழுத்தும்” திட்டம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் ஜூன் 14 : கொரோனா பெருந்தொற்றினால் தமிழகப் பள்ளிகள் 19 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு,வகுப்புகள் இல்லாத நிலையில் மாணவர்களின் கற்றலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றினால் தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3-ஆம் வகுப்புக் குழந்தைகள், தங்கள் வகுப்பிற்குரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை.எனவே குழந்தைகள் இழந்த கற்றலைப் பெறுவதற்கு உதவியாகப் பள்ளிக் கல்வித்துறையின் முன்னோடித் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் கற்றல் நிலைக்கேற்பக் கற்பித்தல் என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட இருக்கும் “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி,கைபேசி செயலி,திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் கையேடு,சான்றிதழ்,கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்,புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை தொடங்கி வைத்த முதலமைச்சர் அவர்கள் “எண்ணும் எழுத்தும்” மாதிரி வகுப்புகளைப் பார்வையிட்டார்.

இதில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா,பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.