பதிவு:2025-07-18 11:11:58
திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் : 150 பேர் கைது :
திருவள்ளூர் ஜூலை 18 : தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 17,18 ஆகிய நாள்களில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்பேரில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலை முன்பு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.ராஜாஜி, எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் டி.முருகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜே.ஜான், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.ருக்மங்கநாதன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை நிலையச் செயலாளர் ஆர்.பி.முரளி மற்றும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.பிரசன்னா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்தப் போராட்டத்தை டிட்டோ ஜாக்கின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா. தாஸ் தொடங்கி வைத்தார்.
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும் மற்றும் அரசாணை 243 ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்து சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டிட்டோ ஜாக் குழுவைச் சேர்ந்த 150 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.