பதிவு:2025-07-19 10:58:58
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரை 2 வது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணி : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 19 : செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் 2 வது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்காக ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூவிருந்தவல்லி புறவழிச் சாலை சந்திப்பு வரை இரண்டாவது வரிசை குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சென்னை மாநகருக்கு கொண்டு செல்வதற்காக பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் பகுதி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூர் வரை 11.7 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும் இரண்டாம் பகுதி பூவிருந்தவல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்குவதால் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படும். இதன் மூலம் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் திருபெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள பொது மக்கள் பயன் பெறுவர்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் செம்பரம்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஆய்வு செய்து அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.அதன்பின்னர், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது இந்நிலையத்தை முழுவதுமாக மறுசீரமைத்து முழுமையான கொள்ளளவில் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அலுவலர்கள் எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் இந்நிலையத்தின் மறுசீரமைப்பு உற்பத்தி தொடங்குவதற்கு விரிவான திட்ட அறிக்கையினை சமர்ப்பித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, துணை மேயர் மு. மகேஷ் குமார், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், சென்னை குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர் கௌரவ் குமார், பொறியியல் இயக்குநர் (பொ) டி.மைதிலி, மேற்பார்வை பொறியாளர் ஐ.சாந்தி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.