பதிவு:2025-07-19 11:01:26
திருவள்ளூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டு மனையை மீட்டுத் தர நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மூதாட்டி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி :
திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ருக்மணி. இவரது கணவர் நீலமேகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் திருமணம் ஆன நிலையில் திருமணம் ஆகாத தனது இரண்டாவது மகளுடன் மூதாட்டி ருக்மணி வசித்து வருகிறார். இந்த நிலையில் சர்வே எண் 875/2- ல் ருக்மணிக்கு சொந்தமான 14 செண்ட் பூர்வீக வீட்டு மனையை அதே பகுதியை சேர்ந்த பதனசேகர் என்பவர் ஆக்கிரமித்து உள்ளதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்றம் ருக்மணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை அடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய சென்றபோது தனசேகர் என்பவர் அதிகாரிகளை நிலத்தை அளவீடு செய்ய விடாமல் தடுத்ததோடு மூதாட்டி ருக்மணியிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மூதாட்டி தனது மகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி, தனசேகர் மீது நடவடிக்கை எடுகக வலியுறுத்தி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுமனை மீட்டுத்தர நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.