பதிவு:2025-07-21 11:43:21
சாலை வசதி செய்து தரக் கோரி கொரக்க தண்டலம் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் சாலை மறியல் :
திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரக்கத்தண்டலம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்து முக்கிய சாலைக்கு வர வேண்டும் என்றால் சுமார் நான்கு கிலோமீட்டர் நடந்து வரவேண்டும். எனவே சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என சுமார் 15 ஆண்டுக்கு மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றும், இதுகுறித்து பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராடி வரும் நிலையில் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் வராததால்,மூன்று கிலோ மீட்டருக்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையானது உருவானது, மேலும் திங்கட்கிழமை காலை நேரம் என்பதால் பள்ளிக்கு செல்வோர் வேலைக்கு செல்வோர் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் என ஏராளமானோர் சாலை போக்குவரத்து நெரிசலில் தவித்தனர்,
இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலானது உருவாகியுள்ளது, இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.