பதிவு:2025-07-23 12:31:10
பெருமாள்பட்டு ஊராட்சி ஐஓபி நகரில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்மாற்றி மற்றும் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க கோரி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு :
திருவள்ளூர் ஜூலை 23 : திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி ஐஓபி நகர் மற்றும் ரயில் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்மாற்றி மூலம் இந்த குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மின்மாற்றி மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது.
அதேபோல் இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் செல்லும் மின் இணைப்பு ஒயர்களும் மிகவும் தாழ்வான நிலையில் செல்வதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள், லாரிகள் உரசி அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைக்கவும், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீர்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதே போல் மாருதி நகரில் கடந்த ஆண்டு தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் சூறாவளி காற்றின் போது அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் இந்த ஐஓபி நகர் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.