வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-07-23 12:34:50



வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 23 : வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate (https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் / முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.

வேலைக்கான ஒப்பந்தம், விசா, மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகு பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம் / முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம், அல்லது சிறை தண்டனைக்கே இட்டு செல்லும்.வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்:

இந்தியாவிலிருந்து அழைப்புக்கு :1800 309 3793,வெளிநாடுகளிலிருந்து : 0 80 6900 9900 (Missed Call); 0 80 6900 9901, மின்னஞ்சல்: nrtchennai@gmail.com / nrtchennai@tn.gov.in,வலைத்தளம்: https://nrtamils.tn.gov.in வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து. அரசு அமைத்துள்ள சட்டப்பூர்வமான வழியில் செல்லும் போது தான் பாதுகாப்பான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.